மாற்றுத் திறனாளிகள் நிலையான அபிவிருத்தி அடைந்து தற்சார்பு பொருளாதாரத்தில் வாழ நீங்களும் உதவலாம். தொடர்புக்கு WE CAN @ 077 6576 807 | wecancj@gmail.com
WE CAN மாற்றுத் திறனாளிகள் அமைப்பானது, உயர்ந்த சமூக வாழ்வை மாற்றுத்திறனாளிகளும் அனுபவிக்கும் நோக்கத்துடன் மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகளால் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கீழ் வாழும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் இதன் அங்கத்தவர்களாக உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான விடயங்களை உகந்த வகையில் கவனம் கொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகளைச் செய்வதும் மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டுவதும் மருத்துவ ஆதரவை பெற்றுக் கொடுப்பதும் மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலம் குறித்து நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டங்களை முன்வைப்பதும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதும் அமைப்பின் கடமைகளாகும்.
மாற்றுத் திறனாளிகள் வளாகம்
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயற்பாட்டுத் தளமாக மாற்றுத்திறனாளிகள் வளாகம் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.
அமைப்புக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியானது பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரன் அவர்களால் 2019 இல் வழங்கப்பட்டது. காணிக்கான வேலி அமைக்கும் செலவை அன்புநெறி அமெரிக்கா வழங்கியது. காணிக்குள் தோட்ட மற்றும் வளாக அபிவிருத்தி தொடர்பான நிதியாதரவை அன்புநெறி அமெரிக்கா & அன்புநெறி கனடா அமைப்பினர் வழங்கினர். வளாகத்தில் மாட்டுத் தொழுவம் ஒன்றை அமைப்பதற்கான நிதியாதரவை சுவிஸர்லாந்து, துர்க்கை அறக்கட்டளையினர் வழங்கினர். தன்னார்வத் தொண்டர்களதும் அமைப்புகளதும் அன்பளிப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளது இடையறாத பங்களிப்பிலும் இவ்வமைப்பு நிலையான ஒன்றாக கட்டியெழுப்பப் பட்டு வருகிறது.
எம்மோடிணைந்து இத் திட்டத்தின் பல்வேறு செயற் திட்டங்களிலொன்றை பொறுப்பெடுக்க விரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
wecancj@gmail.com|இயக்குனர் வெற்றிச்செல்வி - 0776 576 807
மாற்றுத் திறனாளிகள் தொழிற் கூடம்
மாந்தைமேற்கு மாற்றுத்திறனாளிகள்அமைப்புக்கு என தொழிற் கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இயற்கை மூலப் பொருட்கள் கழிவு பொருட்களில் கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்தல் இதன் பிரதான உற்பத்தியாக ஆரம்பிக்கப்பட்டது. சிரட்டை, கழிவு பலகை என்பவற்றைக் கொண்டு கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. பின்னல் கதிரைகள் பின்னிக் கொடுத்தல், விளக்குமாறு தயாரித்தல் என்பனவும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. தொழிற் கூட அபிவிருத்தி தொடர்பான நிதியாதரவை அன்புநெறி கனடா அமைப்பினர் வழங்கினர்.
மாற்றுத்திறனாளி கவியழகன் (அறிவு) இத் தொழில் கூடத்தை பொறுப்பாக இருந்து செயற்படுத்தி வருகிறார்.
இங்கே கோரலுக்கு ஏற்ப பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும்.
எம்மோடிணைந்து இத் தொழில் கூடத்தின் பல்வேறு செயற் திட்டங்களிலொன்றை பொறுப்பெடுக்க விரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
கவியழகன் - 0777 156 115
எங்கள் கைவண்ணத்தில் உங்கள் இல்லங்களையும் அலங்கரிக்க
ஸ்ரீகவியழகனின் தலைமையில் எமக்கென ஒரு தொழில்கூடம் இருக்கிறது. மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு அடம்பனில் மினுக்கன் எனும் கிராமத்தில் இயங்கும் இத் தொழில் கூடத்தில் உங்களுக்குத் தேவையான வடிவங்களில் பரிசுப் பொருட்களையும் தயாரித்து வாங்கிக் கொள்ளலாம்.
கவியழகன் - 0777 156 115
வடை, வாழைக்காய் பஜ்ஜி பல பொரியல் வகைகளுடன் குளிரக்குளிர வல்லாரை உடன் பானமும்
சுடச்சுட வடை வாழைக்காய் பஜ்ஜி மற்றும் பல பொரியல் வகைகளுடன் குளிரக்குளிர வல்லாரை உடன் பானமும் கிடைக்கும்.
நேரில் வந்தமர்ந்தும் வீட்டுக்கு எடுத்துச் சென்றும் நிகழ்வுகளுக்கு ஓடர் தந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு
0761236448
0775518066
செப்ரெம்பர் 2021
சேவையால் மகிழ்வு
பெண்தலைமைக் குடும்பத் தாயார் ஒருவரது வீட்டுக்கூரையை திருத்திக் கொடுத்தோம். நண்பர் யூடி அவர்களது அன்பளிப்பில் கூரை திருத்திக் கொடுத்ததோடு பாளைகள் விடத் தொடங்கிய இளந்தென்னைகளுக்கு பசளையிடக் கிடங்குகள் வெட்டிக் கொடுத்தோம். அன்றாட வருமானத்துக்கான வாய்ப்பாக வாத்துகளும் அன்பளித்தோம்.
செப்ரெம்பர் 2021
உதவிகளால் உயரும் வாழ்வு
அமரர் சரவணமுத்து கந்தையா அவர்களது நினைவாக அவரது பிள்ளைகளும் மருமக்களுமாக இணைந்து மாற்றுத்திறனாளி பிரேம்குமார் அவர்களது தோட்டத்துக்கான தண்ணீர் வசதியளித்து அபிவிருத்திப் பணிகளில் உதவினர். தந்தை மற்றும் தாயார் நினைவாக மாற்றுத்திறனாளிகள் மரநடுகை செய்தோம். அன்புப் பெற்றோரின் பெயர் விளங்க வாழும் பிள்ளைகளும் உற்றோரும் நலவாழ்வு வாழ்க. அவர்கள் பெயர் விளங்க இப்புவியை குளிர்வித்து பெருமரங்கள் உயரும்.
இணைப்புக்கு நன்றி - வேல்ட் வரோட் நண்பர்கள் ஜேர்மன்
12 செப்ரெம்பர் 2021
விற்பனைக்காக விளக்குமாறுகள் தயாரிப்பு
மொத்தமாகக் கொள்வனவு செய்ய - 0777 156 115
தொழில் கூடத்தில் விளக்குமாறு உற்பத்தி
விற்பனைக்காக விளக்குமாறுகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகி விட்டன. கவியழகனும் சந்திரனும் தாமே பரப்புக்கடந்தான் காட்டிற்குச் சென்று தடிகளை வெட்டிக்கொண்டு வந்தார்கள். மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையில் ஈர்க்கில் கொள்வனவு செய்யப்படுகின்றன.
திருக்கேதீச்சரம் அன்பளிப்பு
அமைப்பு சார்பான வேண்டுகோளுக்கு இணங்க திருக்கேதீச்சரம் நிர்வாகத்தினர் மாடுகளை அன்பளிப்பாக வழங்கினர். இன்று இரண்டு பசுக்களை வளாகத்திற்கு வரவேற்றோம். எமது வளாகத்தில் வளர்ந்த புற்களைச் சுவைக்கின்றன பசுக்கள்.
மரக்கறி விதைகள் வழங்கல்
அமைப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கு மரக்கறி விதைகள் வழங்கப்பட்டன. இணைப்பாளர் ஜெனிக்கும் தன்னார்வத் தொண்டராக வழங்கலில் ஆதரவளித்த நிர்மலா அவர்களுக்கும் ஓபின் நிறுவனத்தினருக்கும் எமது அமைப்பின் சார்பான நன்றிகள்.
மரக்கறி விதைகள் விநியோகம்
மாந்தை மேற்கு பிரதேச மாற்றுத் திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்.
மன்னார் OPEN நிறுவனத்தின் ஆதரவில் ஒரு தொகுதி மரக்கறி விதைகள் கிடைத்துள்ளன. முதற் கட்டமாக அமைப்பின் செயலாளர் அறிவு/சிறிகவியழகனிடம் தம்மை பதிவு செய்த 91 பேருக்கு வழங்கப்படும். ஓபின் நிறுவனத்தின் வீட்டுத்தோட்ட செயல் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இதே திட்டத்தில் உள்வாங்கப்பட மாட்டீர்கள். ஆனாலும் உங்கள் தோட்டத்தின் சிறந்த முயற்சிகளை பாராட்டி பரிசு வழங்கி மேலதிக ஆதரவுகளை வழங்கும் ஏற்பாடுகளை நமது அமைப்பு முன்னெடுக்கும்.
இதுவரை பதியப் படாமல் காணியும் நீர் வசதியும் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகள் நேரில் வளாகத்திற்கு வாருங்கள்.
கவியழகன் - 0777 156 115
WE CAN அமைப்பின் கிராமமட்ட சிறு குழுக்கள்
WE CAN மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் கிராமமட்ட சிறு குழுக்களின் வளர்ச்சிக்காக காசோலை வழங்கப் பட்டது. இக்குழுக்களை உருவாக்கி அதனை சுயமாக இயக்கச் செய்யும் முகமாக இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற Voice அமைப்புக்கும் சியாம் அவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
மாற்றுத் திறனாளிகள் வளாகம் திறப்பு விழா
அன்புநெறி அமெரிக்கா மற்றும் அன்புநெறி கனடாவின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுவரும் மாற்றுத் திறனாளிகள் வளாகம், பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரன் மற்றும் பிரதேச செயலகத்தினர், அன்னை இல்லத்தின் சார்பாக திரு.நடேசன் அவர்கள், அயலவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் பங்கேற்க திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வளாகப் பெயர்ப்பலகை அமைப்பின் தலைவர் திரு.யேசுதாஸன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வளாகம் அமைப்பின் பொருளாளர் திரு.சதீஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மரநடுகை மெற்கொள்ளப்பட்டது.
யாழ் இந்து பழைய மாணவர்கள் (1991) ஆதரவில் உலருணவு வழங்கல்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 1991 இல் உயர்தரத்தில் கல்விகற்ற மாணவர்கள் பலர் திரட்டி வழங்கிய நிதி ஆதரவில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கான 2000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகள் தோட்டச் செய்கை
எமது மாற்றுத் திறனாளிகள் தோட்டச் செய்கை பற்றி சக்தி TV/News First TVயின் செய்தித் தொகுப்பு
உலருணவு வழங்கல் செயற்பாடுகள்
மாந்தை மேற்கு பிரதேச மாற்றுத்திறனாளிகளும் கொரோணா வைரஸ் கால ஊரடங்கு நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களாகினர். அதனால் அமைப்பின் செயற்குழு தமது அங்கத்தவர்கள் சகலருக்குமாக உலருணவு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் செயற்பாடுகள் இதுவரை மூன்று கட்டங்களாக உலருணவு கிடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 125 பேராவர். மாந்தைமேற்கு பிரதேச செயலகத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் 598 பேராவர்.
வாழ்வாதார மற்றும் கல்விசார் உதவிகள்
அருட்தந்தை அன்புராசா அடிகளார் அவரது நண்பரின் ஆதரவுடன் வழங்கிய வாழ்வாதார மற்றும் கல்விசார் ஊக்குவிப்பு உதவிகள்.
இகோ வில்லேஜ் பயிற்சியும் செயற்பாடுகளும்
சர்மிளா செய்யித் மற்றும் ட்ரூடி ஜூரியன்ஸ் ஆகிய இரு தோழிகளும் குளோபல் இகோ வில்லேஜ் வலையமைப்பின் பிரதிநிதிகளாவர். எமது அமைப்புடன் தொடர்புகொண்டு பசுமைக் கிராமத்தை கட்டியமைத்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலை நிகழ்த்தினர். எமது மாற்றுத்திறனாளிகள் வளாகத்தில் இடம்பெற்ற இருநாட் கலந்துரையாடல் பயிற்சியில் மாற்றுத்திறனாளிப் பெண்களும் உள்ளுர் பெண்களும் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களும் பங்குபற்றினர். நிதி அணுசரனைணை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் வழங்கியிருந்தனர்.
பசுமைச் சோலை
வளாகத்தில் பசுமைச் சோலை கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இங்கே மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகிறார்கள்.